கட்டியணைக்க 3 நிமிடங்கள் மட்டுமே., விமான நிலையத்தில் வினோத கட்டுப்பாடு.!
நியூசிலாந்து விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பும் போது அதிபட்சம் 3 நிமிடங்கள் மட்டுமே கட்டிப்பிடிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து : தனது குடும்பம், நண்பர்கள், சொந்த ஊர் என அனைத்தையும் விட்டு விமானத்தின் மூலமோ, ரயிலின் மூலமோ நீண்ட தூரம் நீண்ட நாட்கள் பணிக்காகவோ, படிப்புக்காகவோ பயணிக்கும் நபரை அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பாச மிகுதியில் கட்டிபிடித்து வழியனுப்புவது வழக்கம்.
இந்த நடைமுறைக்கு நியூசிலாந்து விமான நிலையம் கட்டுப்பாடு விதித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்நாட்டில் தெற்கு தீவில் உள்ள டுனெடின் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அதிகம் இருக்கும். அங்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வினோத கட்டுப்பாட்டை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, ஒருவரை வழியனுப்புவதற்கு 3 நிமிடங்கள் வரை மட்டுமே கட்டிப்பிடிக்க வேண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக கட்டிப்பிடித்து வழியனுப்ப வேண்டுமென்றால் விமான நிலைய கார் பார்க்கிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் என விமான நிலைய பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், விமான நிலைய முனையத்தில் பயணிகள் அடுத்தடுத்து புறப்படுவதற்கும், விமான நிலைய நெரிசலை குறைக்கப்படும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆனால், விமான நிலைய நிர்வாகத்தின் இந்த செயல் மனித உணர்வுகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது. மனிதாபிமானமற்ற செயல் என்று பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து வருகின்றனர்.