வியாழனுக்கு தற்போது 92 நிலவுகள்; வானியலாளர்கள் கண்டுபிடிப்பு.!
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனுக்கு தற்போது 92 நிலவுகள் உள்ளன.
ஹவாய் மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வியாழனைச் சுற்றி 12 புதிய நிலவுகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இதன் மூலம் கிரகத்தின் நிலவு எண்ணிக்கையை 92 ஆக உயர்ந்துள்ளது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன், மற்ற கிரகங்களை விட அதிக நிலவுகளைக் கொண்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சனி கிரகம் 83 நிலவுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வியாழன் கோளின் நிலவுகள், சமீபத்தில் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மைனர் பிளானட் சென்டரால் அங்கீகரிக்கப்பட்டது. அவற்றின் சுற்றுப்பாதைகள் மற்றும் பின்தொடருதல் ஆகியவற்றை வைத்து உறுதி செய்யப்பட்டதாக வானியல் குழுவில் இருந்த கார்னகி நிறுவனத்தின் ஸ்காட் ஷெப்பர்ட் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த நிலவுகளில் ஒன்றை, அவற்றின் தோற்றத்தை சிறப்பாகக் கண்டறிய அவற்றை நெருக்கமாகப் படம்பிடிக்க முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார். ஷெப்பர்ட் – சில ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தை சுற்றிய நிலவுகளைக் கண்டுபிடித்தவர் மற்றும் வியாழனைச் சுற்றி இதுவரை 70 நிலவு கண்டுபிடிக்கும் பணிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.