பரிதாபம்…இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்ததில் 12 பேர் பலி.!
பாகிஸ்தான் நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் அரிசி, கோதுமை உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக நுற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் கூட்டமாக கூடினார்கள்.
இதனால், அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த காரணத்தால் அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்ததில் 12 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.