காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!
காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் 3 இஸ்ரேலிய பெண்களை விடுவித்த நிலையில், 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்துள்ளது.
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர் பல்வேறு ஆயுத தாக்குதலை எதிர்கொண்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். பல பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர். அதே போல இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் பலர் ஹமாஸ் அமைப்பினரிடம் பணய கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தமானது அமெரிக்கா, கத்தார் மத்தியஸ்தலத்தை அடுத்து கடந்த புதன் கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்பபடி) போர் நிறுத்தம் அமலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணய கைதிகளின் விவரங்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட தாமதம் ஆனதால் சுமார் 3 மணி நேரம் கழித்து போர் நிறுத்தம் அமலானது.
போர் நிறுத்தம் அமலானதை அடுத்து காசா – எகிப்து எல்லையில் இருந்த மருத்துவ உதவி பொருட்கள் காசா நகருக்குள் சென்றன. தாக்குதல் காரணமாக பதுங்கி இருந்த காசா நகரத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஹமாஸ் அமைப்பினரும் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிகளுடன் வீதிகளில் சென்றனர். காசா நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போர் நிறுத்தத்தை வரவேற்று கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று ரோமி கோனென் (வயது 24). எமிலி டமாரி, (வயது 28), டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ( வயது 31) ஆகிய 3 பணய கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் காசா நகரில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் விடுவித்தனர். முகத்தை முகமூடியால் மூடியபடி துப்பாக்கி ஏந்தியபடி வேனில் வந்து பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர் .
இதனை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தனர். அவர்கள் இஸ்ரேலின் ஓபர் சிறைச்சாலையிலிருந்து பேருந்து மூலம் காசா நகருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசித்தனர்.
இந்த போர் நிறுத்தமானது நேற்று (ஜனவரி 19) முதல் 6 வாரங்கள் (42 நாட்கள்) இருக்கும் என்றும், இந்த போர் நிறுத்த காலத்தில் 3 கட்டமாக பணய கைதிகள் விடுக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் தரப்பில் இருந்து 1904 பேரும், ஹமாஸ் தரப்பில் இருந்து 33 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ஹமாஸ் 3 பேரையும், இஸ்ரேல் ராணுவம் 90 பேரையும் விடுவித்துள்ளது.