“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!
ஹமாஸ் விடுவிக்கும் பணயக் கைதிகளின் விவரங்கள் தெரியாத நிலையில் போரை நிறுத்த வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது இன்று முதல் 6 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 வார காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டது. இன்று மாலை இந்த பரிமாற்றம் இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால், நேற்று இரவு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தரப்பு 33 பணய கைதிகளை விடுவிப்பதாக கூறினார்கள். ஆனால், தற்போது வரை விடுவிக்கப்படும் பணய கைதிகள் பற்றிய விவரங்களை ஹமாஸ் வெளியிடவில்லை. அதனால் அவர்கள் விவரங்களை வெளியிடும் வரை போர் நிறுத்தம் இல்லை என அறிவித்தார்.
இன்றுக்குள் ஹமாஸ் தரப்பு இன்று விடுவிக்கும் 3 பணய கைதிகளின் விவரங்களை வெளியிடுவார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்போது வரையில் பெயர்கள் அறிவிக்கப்படாததால் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பணய கைதிகளை காசா நகரில் எங்கு விடுவிப்பார்கள் என்று கூட ஹமாஸ் தரப்பு இதுவரை கூறவில்லை என தகவல் வெளியாகியுளளது
இது குறித்து இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” காசாவில் இஸ்ரேல் படைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. பணயக்கைதிகள் பட்டியல் வெளியிடப்படாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஹமாஸ் பின்பற்றாமல் இருந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளது” என்று கூறினார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முக்கிய நபர் AP செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தி குறிப்பில், ஹமாஸ் தரப்பு நிச்சயம் பெயர் பட்டியலை கொடுக்கும். எப்போது கொடுப்பார்கள் என்ற நேர கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன என தெரிவித்தார்.