“முதலில் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்க வேண்டும்” – டோனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்!!
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்பின் கருத்து தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல், கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் கூட லெபனான் மீதான தாக்குதலைத் தொடருவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலை மேலும் தூண்டி விடும் விதமாக பேசி இருக்கிறார். அது உலக அளவில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘ஈரானின் அனுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை ஆதரிக்கப் போவதில்லை எனவும் ஈரான் தாக்குதல் நடத்தினால் எதிர்த்தாக்குதல் செய்யுங்கள் எனவும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும்’ அவர் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையிலும் மேற்கொண்டு இந்த போரில் இஸ்ரேலைத் தூண்டி விடும் விதமாகவும் எதிர்மறையாகக் கருத்தை டிரம்ப் பேசி இருக்கிறார். இந்த போர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, “பைடன் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறார். அணு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என ஈரான் திட்டமிட்டாலே அதை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகக் கட்டாயம் பயன்படுத்தியே தீருவார்கள்.
அணு சக்தி என்பது உலகுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனால், இஸ்ரேல் முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதே சரியாக இருக்கும். இஸ்ரேல் முதலில் இதனைச் செய்யட்டும். அதன் பின் பின் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்”, எனக் கூறி இருக்கிறார். டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.