பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் அங்குள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் விமான நிலையத்தின் அருகாமையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதன் விளைவாக அங்கிருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ளதே தவிர, தாக்குதலை குறைக்கவில்லை.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம்’ என தெரிவித்திருந்தார்.
இதன் விளைவாக ஹிஸ்புல்லாவினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்கள். எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல, அந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.