வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 93 பேர் பலி!
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் தற்போது வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
காசா : கடந்த வருடம் அக்-7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில் காசாவின் பீட்லாஹியா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல்நடத்தியது.
இந்த தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு முற்றிலும் இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அதில் இதுவரை 93 பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் சிலர் குழந்தைகள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், கட்டிட இடிபாடுகளில் மேற்கொண்டு 40 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா சபையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கருதப்படுகிறது.