இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் : இரு தரப்பில் விடுவிக்கப்படும் பணய கைதிகளின் விவரம் இதோ…
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தப்படி இன்று 3 இஸ்ரேல் பணய கைதிகளும், 369 பாலஸ்தீனிய பணய கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளனர்.

டெல் அவிஸ் : நீண்ட மாதங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வந்திருந்த இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பு பன்னாட்டு மத்தியஸ்தலத்தை அடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் இடைக்கால போர்நிறுத்ததை கடைபிடித்து வருகிறது. இருந்தும் அங்காங்கே காசா நகரில் சில இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக ஹமாஸ் தரப்பு குற்றம் சாட்டி வந்தது.
இதனால் இந்த வாரம் (இன்று) விடுவிக்க வேண்டிய இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என முதலில் ஹமாஸ் தரப்பு கூறியது. இதனை அடுத்து இஸ்ரேல் தரப்பில் இருந்தும் அமெரிக்கா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என தெரியாது என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இப்படியான சூழலில், பின்னர் 3 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு ஒப்புக்கொண்டது. கடந்த ஜனவரி 19 முதல் 16 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல, இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை 766 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று 369 பாலஸ்தீன பணய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவிக்கவுள்ளது.
ஹமாஸ் விடுவிக்கும் பணய கைதிகள், 29 வயதான ரஷ்ய-இஸ்ரேலிய இளைஞர் அலெக்சாண்டர் ட்ரூபனோவ், 46 வயதான அர்ஜென்டினா-இஸ்ரேலிய நபர் யெய்ர் ஹார்ன், 36 வயதான அமெரிக்கர்-இஸ்ரேலியர் நபர் சாகுய் டெக்கல் சென் ஆகியோர் இன்று தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் விடுவிக்க ஹமாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது அங்கு செஞ்சிலுவைச் சங்கக் குழுக்கள் சென்றுள்ளது.
இந்த விடுவிப்புக்கு ஈடாக 369 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர். அதில் 36 பேர் அங்கு ஆயுள் தண்டனை பெற்றவர்கள். 333 பேர் காசா பகுதியைச் சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.