தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்! 24 பேர் உயிரிழப்பு!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து லெபனானில் உள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடந்த இந்த வான்வெளித் தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கப்பட்டுள்ளது.
இதன் இடிபாடுகளை அகற்றி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி லெபனானின் நடுவில் செல்ல முயற்சிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து 3-வது நாளாக மோதல்கள் நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதே போல இதற்குப் பதில் தாக்குதல் நடத்த லெபனானிலிருந்து, இஸ்ரேலின் வடக்கு பகுதிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை இஸ்ரேல் ராணுவம் அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் போர் தொடங்கியதிலிருந்து, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,867 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 13,000-திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் லெபனான் மீதான தரைவழி தாக்குதலைத் தொடங்கித் தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.