முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பு போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் உரையாடி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொடர்பு கொண்டு, இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் பேசியதாவது ” புதினுடன் தொலைபேசியில் பேசினேன். ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலர் சக்தி உள்பட பல்வேறு விஷயங்களை பேசினோம். இரு நாடுகளின் பலன்கள் குறித்தும் உரையாடினோம். உக்ரைன் போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகுவதையும் நிறுத்த வேண்டும் என்பதை நான் அவரிடம் எடுத்துரைத்திருக்கிறேன்.
நமது அமைப்புகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், ஜெலென்ஸ்கியுடன் தொடர்பு கொண்டு, இந்த முயற்சியை முன்னெடுக்கவும் நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை முழுவதுமாக முடிந்த பின்னர், ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உலக நாடுகளில் இதன் மூலம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.