பேச்சில் தடுமாறும் ஜோ பைடன் ..! அமெரிக்க தேர்தலில் திருப்பம்?
அமெரிக்கா : அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக தற்போது செயலாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இருவரும் நேருக்கு நேர் போட்டியிடுவதால் அமெரிக்க தேர்தல் களம் சூடு பறக்கிறது என்றே கூறலாம். அமெரிக்காவில் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கமாக கொண்டிருப்பார்கள். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27-ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாதித்தினர். ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசும் பொருளாக பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாகவும், அவருக்குப் பதிலுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்போது ட்ரம்பா? பைடனா? என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.