‘கண்டிஷனுடன்’ போரை நிறுத்த தயாரான இஸ்ரேல்? கருத்து தெரிவிக்காத வெள்ளை மாளிகை!
நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிபந்தனைகளுடன் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஆவணம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனானில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு முதற்கட்டமாக இஸ்ரேல் இரண்டு நிபந்தனைகளுடன் அமெரிக்காவிற்கு ஆவணம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதல் கண்டிஷனாக, இஸ்ரேல் எல்லையில் மீண்டும் ஹிஸ்புல்லா வலிமையாக உருவெடுக்காமல் இருக்கவும், எல்லை அருகே பயங்கரவாத உள்கட்டமைப்பு மீண்டும் உருவாகாமல் இருக்கவும், இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும், லெபனான் வான்வெளியில் இஸ்ரேல் விமானப் படை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என இரண்டாவது கண்டிஷனாக இஸ்ரேல் கோரியுள்ளது. இந்த இரண்டு கண்டிஷனையும் ஏற்றால் லெபனானில் நடத்தும் தாக்குதலை முற்றிலும் நிறுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது கிட்டத்தட்ட லெபனான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடும். இதனால், இந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் லெபனான் அரசும் சரி, சர்வதேச சமூகமும் சரி, இந்த கண்டிஷன்களுக்கு ஒத்து போகமாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி, இஸ்ரேல்-லெபனான் நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகமும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் குறிப்பிடவில்லை. அதே வேளை, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதரான அமோஸ் ஹோச்ஸ்டீன் இன்று பெய்ரூட் செல்ல உள்ளதால், இந்த நிபந்தனைகளைப் பற்றி ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.