டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பா.? விளக்கம் அளித்த அந்நாட்டு அரசு.!
டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர்.
டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் முக்கிய தகவலாக, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்னதாக, ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் அமைப்பு சதித்திட்டம் திட்டியதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக CNN செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அதாவது, 2020ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது ஈரான் உயர்மட்ட ராணுவ தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்தார். சுலைமானி உயிரிழப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கூட டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி புதன்கிழமை அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த செய்தி குறிப்பில், ‘ ட்ரம்ப் மீதான சமீபத்திய தாக்குதலில் ஈரான் எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை. இந்த குற்றசாட்டுகளை ஈரான் அரசு கடுமையாக நிராகரிக்கிறது. ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி. சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார். ஈரான் ட்ரம்பை சட்டத்தின் வழியில் சந்திக்கும் என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.