அதிகரிக்கும் போர் பதற்றம்! இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா!
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெயரூட் : ஒரு சில மாதங்களுக்கு முன் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்துச் சிதறி பெரும் பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கு இஸ்ரேல் மௌனம் காத்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரதமர் நெதன்யாகுவின் இந்த பேச்சைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் 165 ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிஸ்னா எனும் டவுனை குறிவைத்து இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்தவுடனேயே ஏவுகணை தாக்குதலை அலர்ட் செய்யும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.
இதனால், அங்கு உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினார்கள். இந்த தாக்குதலில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போர் அதிகரிக்கும் பதற்றம் நிலவி வருகிறது.