சிறையில் இம்ரான் கான்.. ஆட்சியை கலைக்கும் ஷேபாஸ் ஷெரீப்.! வெகு விரைவில் தேர்தலை சந்திக்கும் பாகிஸ்தான்.!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் ஒரு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்றதன் பெயரில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உள்ளது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் பங்கேற்க முடியாது என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிஃப் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே, ராஜினாமா செய்து நாடாளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் இறுதியில் வரக்கூடிய தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் இது எதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிஃப் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பேசியபோது, ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது ஆட்சியை கலைப்பேன் என கூறினார். மீதம் உள்ளவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான் அதற்கு அடுத்து இடைக்கால அரசு பொறுப்பேற்று தேர்தல் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் ஷேபாஸ் ஷெரிஃப் பதவிக்காலம் இருக்கும் நிலையில், இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக, ஷேபாஸ் ஷெரிஃப் முன்கூட்டியே ராஜினாமா செய்து தேர்தல் நடத்துவதற்கு மும்முரமாக இருக்கிறார் என பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகள் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.