இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சமாம்..! என்ஐஏ அறிவிப்பு..!
கனடாவின் தீவிரவாத கும்பலைச் சேர்ந்த லக்பீர் சிங் என்கிற லாண்டா பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து என்கிற லாண்டாவுக்கு எதிராக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது. பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஹரிகே கிராமத்தில் வசிக்கும் லாண்டா ஹெராயின், ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வெடிபொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு, மொஹாய் நகரில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகம் மற்றும் தர்ன் தரன் மாவட்டத்தின் சர்ஹாலி கிராமத்தில் உள்ள காவல் நிலையம் ஆகியவை கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட லக்பீர் சிங் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போழுது கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள எட்மண்டனில் அவர் தலைமறைவாக வசிப்பதாக தகவல்கள் உள்ளன.
இதையடுத்து லக்பீர் சிங் பற்றி தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக அறிவித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லக்பீர் சிங் பற்றி தகவல் தெரிந்தால், புது தில்லியில் உள்ள என்ஐஏவின் தலைமையகத்தின் இலவச அலைபேசி எண் 011-24368800, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் எண் +91-8585931100 மற்றும் மின்னஞ்சல் முகவரி do.nia a@gov.in இல் பகிரலாம் என்று தெரிவித்துள்ளனர்.