அமெரிக்க டாலரை மாற்றினால் 100% வரி! டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் அமெரிக்க டாலரை மாற்றி வேறு நாட்டின் பணத்தில் வர்த்தகம் செய்தால் அமெரிக்க வர்த்தகத்தில் 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன.
ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார் டிரம்ப். பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்காவை வெளியேற்றினார். சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க எல்லை பகுதியில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். பனாமா கால்வாய் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்.
இவ்வாறு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த டிரம்ப், தற்போது இந்தியாவுக்கும் சேர்த்து ஓர் எச்சரிக்கை பதிவை கூறியுள்ளார். அதாவது, உலக வர்த்தகத்தில் அமெரிக்கா டாலரை தவிர்த்து வேறு நாட்டு பணத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வந்தால் அந்த நாடுகள் மீது அமெரிக்க வார்த்தக ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
” பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாட்டின் பணத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தாலோ, அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க வேறு நடவடிக்கை எடுத்தாலோ அந்த நாட்டிற்கு அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய 100% வரி விதிக்கப்படும். இல்லையென்றால் அவர்கள் அமெரிக்க வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது. ” என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதே போல, “பிரிக்ஸ் நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளும் அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாட்டிற்கும் அமெரிக்க வர்த்தகத்தில் ஈடுபடும்போது கூடுதல் வரிகள் விதிக்கப்படும். ” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் துபாய் ஆகிய நாடுகள் உள்ளன . இதில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்க டாலரை தவிர்த்து தங்கள் நாட்டின் பணத்தில் வர்த்தகம் மேற்கொள்ள சில பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் இந்த எச்சரிக்கையை கடந்த டிசம்பர் மாதமே தெரிவித்தார். அப்போது விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், ” உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றும் நடவடிக்கையிலோ, அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளிலோ இந்தியா ஒருபோதும் ஈடுபடவில்லை எனதெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.