மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா! நடுவானிலே இடைமறித்து தாக்கிய இஸ்ரேல்!
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின், துறைமுக நகரான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அதில், பலரையும் பணயக்கைதிகளாக பிடித்தும் சென்றனர், அவர்களை மீட்கும் பணியிலே தற்போது வரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது காசா பகுதியில் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது.
இந்த தாக்குதல் தொடங்கி 1 வருடம் இன்றுடன் நிறைவடைந்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் ஒருமுனையில் நடைபெற்று வந்த போது மறுமுனையில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.
மேலும், ஹிஸ்புல்லாவை முற்றிலும் அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அப்போது தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில், இன்று ஹிஸ்புல்லா மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 10 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. ஹிஸ்புல்லாவினர் கிட்டத்தட்ட 15 ஏவுகணைகளை வீசி இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் இந்த் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். தக்க சமயத்தில் அதனைக் கண்டதும், இஸ்ரேல் ராணுவம் அதில் சில ஏவுகணைகளை நடுவானிலே இடைமறித்து தாக்கியதால் பெரும் விளைவு என்பது ஏற்படாமல் தடுக்க முடிந்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் இதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்தத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் எவ்வளவு பேர் பலியாகியுள்ளனர் என்று தற்போது வரை லெபனானிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.