ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?
அடுத்த ஹெஸ்பொல்லா தலைவர் என்று வதந்தி பரப்பப்பட்ட ஹஷேம் சஃபிதீன், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதில் அந்த நகரங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.
இந்த நிலையில், லெபனான் தலைநகரில் ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள், நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹெஸ்புல்லாவின் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன், பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக சவுதி செய்தி நிறுவனமான அல் ஹதாத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசன் கலீல் யாசினும் கொல்லப்பட்டார். அவர், தலைவராக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தை தாக்கியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது குறிப்பிடத்தக்கது.