சோகம்…சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி.!!
வடக்கு தாய்லாந்தில் பள்ளியின் மீது ஒரு உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தாய்லாந்தின் பிஜிட் மாகாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால் அச்சம் அடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என ஏராளமானோர் அங்குள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, அப்போது மிகவும் வேகமாக மழையுடன் சூறைக்காற்று அங்கு வீசிய காரணத்தால் அங்கு போடப்பட்டிருந்த உலோககூரை கீழே விழுந்தது, இதனால் மழைக்கு தஞ்சமடைந்த ஏராளமானோர் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர்.
மேலும், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்பு பணிக்கு தகவல் கொடுத்த நிலையில், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிட்டத்தட்ட விடிய விடிய நடைபெற்ற இந்த மீட்பு பணியில் 4 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.