‘ஜனநாயக கட்சியின் நம்பிக்கை இவர் தான் ‘! கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஒபாமா!
அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார்.
ஜனநாயக கட்சியின் மாநாடு ..!
இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் இரு கட்சியினரும் முனைப்பாக இருந்து வரும் நிலையில், நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடானது சிகாகோ நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாடானது கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட்-22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்விலேயே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் உரையாற்றியிருந்தார். இது அமெரிக்க மக்களிடையே அதிக கவனம் ஈர்த்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஏன் என்றால் வழக்கமாக மாநாட்டின் கடைசி நாளில் தான் அதிபர் வேட்ப்பார்கள் எப்போதும் உரையாற்றுவார்கள். ஆனால், இங்கே முதல் நாளிலே உரையாற்றியது கவனம் ஈர்த்துள்ளது.
கமலா ஹாரிஸ் உரை ..!
முதல் நாள் மாநாட்டில் தனது உரையில் கமலா ஹாரிஸ் கூறியதாவது, “இந்த உரையை நான் நம் அதிபர் ஜோ பைடனை கொண்டாடுவதன் மூலம் தொடங்க விரும்புகிறேன். கடந்த 4 ஆண்டுகள் நமக்கு ஒரு மிகச் சிறப்பான அதிபர் கிடைத்திருந்தார். அவரை நான் கொண்டாட்டத்துடன் வழியனுப்ப விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் எப்போதும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
உங்களுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் உங்களுக்கு எப்போதும் கடைப்பட்டிருக்கிறோம். நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களிலிருந்தும் மக்கள் இங்குக் குவிந்துள்ளனர். நாம் முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். நாம் போராடினால் வெற்றி பெறுவோம். இதை எப்போதும் நாம் நினைவில் கொள்வோம்” என அந்த உரையில் கமலா ஹாரிஸ் கூறி இருந்தார்.
பாரக் ஒபாமா ஆதரவு பேச்சு ..!
அதனைத் தொடர்ந்து நேற்றைய நாள் நடைபெற்ற இந்த மாநாட்டின் 2-ஆம் நாளில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா உரையாற்றி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும். அதனால் அமெரிக்க மக்களாகிய நீங்கள் யார் மீது நம்பிக்கை கொண்டுளீர்களோ அவர்களுக்காக இறுதி வரை உறுதியாக நீங்கள் போராட வேண்டும்.
இதில் ஒரு சிறிய தவறை கூட அமெரிக்க மக்கள் செய்துவிடக் கூடாது. நடைபெறப் போகும் இந்த அதிபர் தேர்தலை ஒரு போராட்டமாக நினைத்து வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும். கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இனி தன் வாழ்நாள் முழுவதும் தனது அமெரிக்கா கொடுத்த வாய்ப்புகளை மீண்டும் நம் நாட்டுக்கே வழங்க அர்ப்பணித்துள்ளார்.
அந்த அர்ப்பணிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும், அதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்கள் அனைவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் இந்த தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இயங்க தயாராகிவிட்டேன். ஜனநாயக கட்சியின் ஒரு நம்பிக்கை கமலா ஹாரிஸ். அவரது தலைமையில் நம் அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தாயாராக இருக்கிறது”, என்று பாராக் ஒபாமா பேசி இருந்தார்.