இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றார்!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி பெற்றிருக்கிறார்.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி (ஜேவிபி கட்சி) அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றுக் கொண்டார்.
அதே நேரம் புதிய அமைச்சரவையும் அதிபர் அநுர குமர முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டது. இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இடதுசாரி கட்சியான ஜேவிபி கூட்டணியுடன் களமிறங்கியது. நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஜேவிபி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அதில், அதிபர் வேட்பாளரான அநுர, அதிபராகத் தேர்வானார் மட்டுமல்லாது உடனடியாக நாடாளுமன்றத்திற்குமான தேர்தலையும் அறிவித்தார். மேலும், அவர் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. அதிபர் அநுர எதிர்பார்த்ததைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரது கட்சியே வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று இலங்கையின் புதிய பிரதமராகக் கலாநிதி ஹரிணி பதவி ஏற்றுக் கொண்டார்.
இதன் மூலம், இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து வரும் நவ.21ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிபர் அநுர உரையாற்ற இருக்கிறார் அதில் தனது அரசின் செயல் திட்டத்தையும் முன்மொழிய உள்ளார்.