ஹமாஸ் ராணுவத் தலைவர் உயிரிழப்பு.. உறுதிப்படுத்திய இஸ்ரேல்.!
இஸ்ரேல் : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
பிணை கைதிகளில் பெரும்பாலனோர் திரும்பிய நிலையில், ஹாமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையில் போர் நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இதுவரை காசா நகர் தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தார். ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்தார் அப்போது இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே, கடந்த ஜூலை 13ஆம் தேதி தெற்கு காசாவில் கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில், ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
முகமது தெய்ஃப், கடந்தாண்டு அக்டோபர் 7 நடைபெற்ற தாக்குதல் உட்பட இஸ்ரேல் மீதான பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற பல தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளார் என ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் ராணுவம் முகமது தெய்ஃப்பை 7 முறை கொலைசெய்ய முயற்சித்தும் அந்த தாக்குதலில் இருந்து முகமது தெய்ஃப் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.