ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!
எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முடியவில்லை, மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களையும் ஒழித்து கட்டுவோம் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர் நடைபெற்று வருகிறது. அதிலும், சமீப நாட்களில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை அங்கு மேற்கொண்டு வந்தது. இதில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாங்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் தான் ஹமாஸ் தலைவரான ‘யாஹ்யா சின்வர்’. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்து வந்த இஸ்மாயில் ஹனியே ஈரான் சென்றிருந்த போது இஸ்ரேல் தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று காசாவில் நடத்தியத் தாக்குதலில் தற்போதைய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்துள்ளார்.
அதன் பின், யாஹ்யா சின்வார் உயிரிழந்ததை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முடியவில்லை எனவும் மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களையும் ஒழித்து கட்டுவோம் எனவும்’ கூறி இருந்தார்.
இது குறித்து அவர் பேசிய போது, “காசாவில் இருந்து ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் யாஹ்யா சின்வாரின் இந்த மரணம் ஒரு அடையாளமாகும். தீய சக்திகள் பலத்த அடியை சந்தித்துள்ளது. எங்களுக்கு முன்னால் இருக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை, மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களையும் கண்டிப்பாக ஒழித்துக் கட்டுவோம்.
இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்கள், ஆயுதங்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி செய்பவர்கள் வெளியில் சென்று நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள், பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவித்தால் அவர்கள் ஒழிக்கப்படுவார்கள்”, என்று பிரதமர் நெதென்யாகு பேசி இருந்தார்.
மேலும், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருப்பவர்களின் குடும்பங்களிடம், “உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீடு திரும்பும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் பணியை தொடரும்”, என கூறினார். பின், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேலிய வீரர்களையும் பாராட்டி இருந்தார்.