ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்…
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பு இன்று விடுவிக்கும் 4 இஸ்ரேல் பணய கைதிகள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.
காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த இடங்களுக்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன. அதே போல பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 6 வார கால போர் நிறுத்தத்தில் ஹமாஸ் தரப்பில் கைதாகியுள்ளதில் 33 பணய கைதிகளையும், இஸ்ரேல் தரப்பில் கைதாகியுள்ள சுமார் 2000 கைதிகளையும் விடுவிக்க இரு தரப்பு ஒப்புக்கொண்டது. அதன் படி கடந்த வார ஞாயிற்று கிழமை 3 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதே போல பணய கைதிகளாக இருந்த காசா நகர் மக்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்தது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் 2ஆம் கட்ட விடுவிப்பு நிகழ உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இன்று (ஜனவரி 25) ஹமாஸ் அமைப்பு விடுவிக்க உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் விவரத்தை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. லிரி அல்பாக் (வயது 19), கரினா அரிவ் (வயது20) , டேனியலா கில்போவா (வயது 20) மற்றும் நாமா லெவி (வயது 20) ஆகியோர் இன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள். இவர்களை கடந்த 2023 அக்டோபரில் காசா எல்லைக்கு அருகாமையில் உள்ள நஹல் ஓஸ் இராணுவ தளத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதில் பலர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் பணய கைதிகளாக இருப்பதாகவும், சிலர் கைது செய்யப்படும்போது நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று ஹமாஸ் அமைப்பினரால் விடுக்கப்படும் இஸ்ரேல் பணய கைதிகள் விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கப்படும் பாலஸ்தீன மக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.