மீண்டும் அக்டோபர் 6., ஹமாஸ் தாக்குதல்..! அமெரிக்க ஆதரவு.! இஸ்ரேல் பின்னணி நிகழ்வுகள்… 

US - ISRAEL

அக்டோபர் 6, இந்த தேதி இஸ்ரேல் மக்களால் மறக்க முடியாத நாளாக மீண்டும் ஒரு முறை மாறி உள்ளது. 1973ஆம் ஆண்டு இதே அக்டோபர் 6ஆம் தேதி, யூதர்களின் புனித நாளான அன்று இஸ்ரேல் அமைதியாக தங்கள் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தனர். அன்றைய தினம் அமைதியாக இருக்கும் வேளையில் தான் சிரியா , எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் குண்டுமழை பொழிந்தன.

அரபு நாடுகளின் தாக்குதல்களை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல், அதனை உணர்ந்து, பின்வாங்காமல் பதில் தாக்குதல் நடத்தியது. தோல்வியின் விளிம்பு வரை சென்ற இஸ்ரேல் இறுதியில் அக்டோபர் 25அன்று உலக நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த போர் முடிவுக்கு வந்தது. அரபு – இஸ்ரேல் போரில் அரபு நாடுகளில் 8 ஆயிரம் பேர் முதல் 11 ஆயிரம் வரையில் மக்கள் கொல்லப்பட்டனர். 8 ஆயிரம் பேர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்.

தற்போது மீண்டும் அதே போல அக்டோபர் 6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இம்முறை தாக்குதல் நடத்துவது பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக செயல்படும் ஹமாஸ் அமைப்பினர்.  இந்த தாக்குதலையும் இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாரா நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அரணை தாண்டி தாக்குதலை தொடங்கியது ஹமாஸ்.

யார் இந்த ஹமாஸ்.?

1987ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின் மற்றும் அப்துல்  அஸின்  ஆகியோரால் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் ஹமாஸ் அமைப்பு. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதும், பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்பதும் தான்.

இந்த ஹமாஸ் அமைப்பானது பாலஸ்தீன அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி தான் அவர்களின் முக்கிய தளமாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கம் என்பதால், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்றும், ஈரான், சிரியா, லெபனானின் நாடுகளின் ஆதரவோடும் செயல்பட்டு வருகிறது. தற்போதைய இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் துணை நிற்கிறது என்பதே சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

அமெரிக்க ஆதரவு :

5 நாட்களை கடந்து நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளிப்படையாக களமிறங்கி உள்ளது அமெரிக்கா. ஏற்கனவே, இஸ்ரேலுக்கு விமானம் தாங்கிய கப்பல், ஜெட் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா,  வரும் நாட்களில் 4 ஏவுகணை அழிப்பு கப்பல், ஆயுதங்கள் வழங்க உள்ளோம் என அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

இந்த ஆதரவு குறித்து அமெரிக்க வெளியுறவு துறை கூறுகையில், இஸ்ரேல் எதிரிகள் இந்த சமயத்தில், இஸ்ரேலுக்கு எதிராக, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு விட கூடாது என்பதற்காக தான் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

ஏன் ஆதரவு.?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நட்பானது கடந்த 1948 இரண்டாம் உலக போர் சமயத்தில் இருந்தே தொடர்கிறது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்ட போது அமெரிக்காவுக்கு உதவி செய்த நாடுகளில் முக்கியமான நாடு இஸ்ரேல். இரண்டாம் உலக போருக்கு பின்னிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் அமெரிக்கா உள்ளது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது.

அதன் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு, மனிதவள மேம்பாடு என அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பரஸ்பரம் பல உடன்பாடுகள் உள்ளது.  கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களையும், 850 மில்லியன் அளவிலான பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. மேலும், இஸ்ரேல் ஆதரவு குறித்த கருத்து கணிப்பில் 73 சதவீத அமெரிக்க மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தற்போதைய நிலை :

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், கடத்தப்பட்டவர்களில் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்  உறுதி தன்மையை ஆராய்ந்து வருகிறோம். இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. எங்களை போலவே இங்கிலாந்து, பிரான்ஸ், உக்ரைன், தாய்லாந்து நாட்டினரும் தங்கள் நாட்டு மக்கள் இஸ்ரேலில் சிக்கி இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் கூறுகையில், பாலஸ்தீனம் பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்கு இஸ்ரேல் பதில் கூற வேண்டும் என இஸ்ரேலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் எங்களுக்கு ஆதரவாக இருந்தது என ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.

இதுவரை ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், பாலஸ்தீன தரப்பில் 800 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால் அங்கிருந்து சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்