2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!
2030-ல் மொராக்கோ நாட்டில் ஃபிபா உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அந்நாட்டில் 3 மில்லியன் தெரு நாய்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை 2022-ல் கத்தார் நாடு நடத்தியது. அதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதனை அடுத்து 2026ஆம் ஆண்டு ஃபிபா உலக கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
அதனை தொடர்ந்து 2030-ல் நடைபெறும் ஃபிபா உலககோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இதில் மொராக்கோ நாடு 2023 உலககோப்பை கால்பந்தை கருத்தில் கொண்டு தற்போது மேற்கொண்டுள்ளா கொடூர நடவடிக்கை விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமின்றி கேட்போருக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மொராக்கோ நாட்டில் சமீபத்திய ஆண்டுகளாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 2030 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கருத்தில் கொண்டு 3 மில்லியன் (30 லட்சம்) தெரு நாய்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஃபிபா உலககோப்பை கால்பந்து போட்டியை காண உலக நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் தற்போதே தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதற்காக விஷ ஊசி செலுத்தும் துப்பாக்கிகள் மூலமும், அதில் உயிரிழக்காத தெரு நாய்களை அடித்தும் அந்நாட்டு அரசு தெரு நாய்களை கொலை செய்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நாய்களை அந்நாட்டு அரசு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொராக்கோ அரசின் இந்த கொடூர முடிவை அந்நாட்டு விலங்கு நல அமைப்பு மட்டுமன்றி சர்வதேச விலங்கு நல அமைப்பும் (IAWPC) கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. மேலும், மொராக்கோ அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஃபிபா அமைப்பு தலையிட்டு விளக்கம் கேட்க வேண்டும் எனவும் விலங்குகள் நல அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.