சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !
இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய மாணவர்களை சோதனை அடிப்படையில் திரும்பப் பெறுவதைப் பரிசீலிக்க சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் மாத இறுதியில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் ஒரு செய்திக்குறிப்பில், சீனாவுக்குத் திரும்ப விரும்பும் மாணவர்களின் விவரங்களைக் கோரியதாகவும் மாணவர்களின் பட்டியல் சீனத் தரப்புக்கு அவர்களின் பரிசீலனைக்காக வழங்கப்பட்டதாக முரளீதரன் கூறினார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்வியை தொடர்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக முரளீதரன் கூறினார். சுமார் 20,000 மருத்துவ மாணவர்கள் போர் காரணமாக தங்கள் கல்லூரிகள் மூடப்பட்ட பின்னர் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பினர்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் கடந்த செவ்வாயன்று வணிகத் தலைவர்களுடனான சந்திப்பில், சர்வதேச பயணிகளுக்கு சீனாவை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.