புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 138 பேர் கொண்ட கார்டினல்கள் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் வாட்டிகனில் நடைபெறும் கான்கிளேவ் ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர்.

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று ரோமில் உள்ள புனித மரிய மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் யார் என்ற கேள்வியும், அவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் முறை, கான்கிளேவ் எனப்படும் ரகசிய மாநாட்டின் மூலம் நடைபெறுகிறது. இந்த செயல்முறை கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும். போப் ஆண்டவர் மறைந்த பிறகு அல்லது பதவி விலகிய பிறகு, 15 முதல் 20 நாட்களுக்குள் 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் வாட்டிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் கூடுவார்கள்.
இந்த கார்டினல்கள் கத்தோலிக்க திருச்சபையின் மிக மூத்த அதிகாரிகளாக இருப்பவர்கள், மறைந்த போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். ரகசிய வாக்கெடுப்பு தொடங்கும் முன்னர் கார்டினல்கள் ரகசிய பிரமாணம் (உறுதிமொழி) எடுப்பார்கள். ஒவ்வொரு கார்டினலும் தனித்தனியாக வாக்களிப்பர். வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
இந்த ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்றால் கருப்பு புகை வெளியாகும். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை புகை வெளியாகும். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் பதவியை ஏற்க ஒப்புதல் அளித்து, ஒரு புதிய பெயரைத் தேர்ந்தெடுப்பார். பின்னர், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து புதிய போப் தனது முதல் உரையை வழங்குவார்.
திருச்சபையின் விதிமுறைப்படி எந்தவொரு ஆண் கத்தோலிக்கரும் போப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், நடைமுறையில், கார்டினல்களில் ஒருவரே பெரும்பாலும் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தற்போது, உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ளனர். இதில் 138 பேர் 80 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், புதிய போப் தேர்வில் வாக்களிக்க அவர்கள் தகுதியுடையவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் 80 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்கள் கான்கிளேவில் பங்கேற்று புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய தகுதியுடையவர்கள்.
மும்பை பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியஸ், கேரளாவை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் கார்டினல் பாஸல் மார்க் கிளீமிஸ் தொட்டுங்கல், ராஞ்சி பேராயர் கார்டினல் டெல்சன் பூலா ஆகியோர் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.