தாலிபான்கள் ஆட்சிக்கு பின் சாலையில் சமோசா விற்கும் முன்னாள் செய்தியாளர்!
செய்தி வாசிப்பாளராக இருந்த முசா முகம்மாதி, தாலிபான்கள் ஆட்சிக்கு பின் சாலையில் சமோசா விற்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் வாழும் மக்கள் பலவிதமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடிமைத்தனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் தங்களது சொந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்கானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் அவர்களது சர்வாதிகாரத்தால் திறமையானவர்கள் முதல் பலர் வேலை இழந்த நிலையில் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முசா முகம்மாதி என்ற ஆப்கான் ஊடகவியலாளரின் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தாலிபான்கள் ஆட்சிக்கு முன்பதாக முன்னணி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் சாலைகளில் சமோசா விற்று தனது குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குனர், செய்தியாளரும், செய்தி வாசிப்பாளருமான முகமாதியை எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளார்.