பாகிஸ்தானில் வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 86 பேர் பலி.!
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு 86 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த ஜூன் 25ம் தேதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையாக 52 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெள்ளப்பெருக்கில் 37 குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நாட்டில் 97 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஏப்ரலில் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பேரழிவு தரும் வெள்ளம் ஏற்பட 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தது.