முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!
ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளதாககூறப்படுகிறது.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
திருப்பி இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில், 46,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இதற்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் காஸாவில் தாக்குதல்களைத் தொடங்கினர் மற்றும் ஹமாஸ் அழிக்கப்படும் வரை போரைத் தொடருவதாக அறிவித்தனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால், ஹமாஸ் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தமானது வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காசா மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.