25 லட்சம் கோடி ரூபாய்.? விண்ணை முட்டிய எலான் மஸ்க் சொத்து மதிப்பு.!
அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 30 சதவீதம் அதிகரித்து தற்போது 304 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய வெற்றி உரையில் பலருக்கு நன்றி கூறினார். அதில் மிக முக்கியமானவர் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய நன்றியை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்தவர் மஸ்க். தேர்தலுக்கு இந்திய மதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியது மட்டும்மல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக தோன்றி டிரம்பிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இப்படி டிரம்பிற்கு வரம்பற்ற ஆதரவை அளித்த மஸ்க்கிற்கு, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அபரிவிதமான லாபம் கிடைத்தது, கிடைக்கிறது, இன்னும் நிறைய லாபம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இதுவரை உலக பணக்காரர்கள் எட்டாத 300 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சொத்துமதிப்பை மஸ்க் எட்டிப்பிடித்துள்ளார் என பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி தளம் வெளியிட்ட தரவுகளின் படி, இதுவரை உலகில் யாரும் எட்டிராத தனிநபர் சொத்து மதிப்பில் 300 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து தற்போது அவரது சொத்து மதிப்பு 304 அமெரிக்க டாலர் , அதாவது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு முன் ஒப்பீடு செய்கையில் 30 சதவீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு மஸ்க் சொத்து மதிப்பு 250 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
அதே போல மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு தற்போது 321.22 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. டெஸ்லா பங்கு சந்தை மதிப்பு வெள்ளிக்கிழமை மதிப்பீட்டின் படி தேர்தலுக்கு பிறகு 8.19 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் 30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது டெஸ்லா என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, மஸ்க்கிற்கு அடுத்தபடியாக, ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன் 230.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அடுத்த இடத்திலும், அமேசானின் ஜெஃப் பெசோஸ் 224.5 பில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும், மார்க் ஜுக்கர்பெர்க் 203.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.