“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறுவதற்கு நிதியுதவி மற்றும் நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக அதிபரான டிரம்ப் அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து இந்த முறை (2024) நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அதிபராகி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் இந்த கம்பேக் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இச்சூழலில், இவருடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் எலான் மஸ்க் தான் என்று கூறுகிறது அமெரிக்க செய்தி வட்டாரம். ஏனென்றால், அந்த அளவுக்கு டிரம்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்தார் மஸ்க். அப்படி, டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவ எலான் மஸ்க் செய்த விஷயங்கள் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம்.
தொடர் ஆதரவு
எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக, அதாவது, 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கும், அடுத்ததாக ஜோ பைடனைக்கும் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு திடீரென அப்படியே அதற்கு எதிராக, இந்த ஆண்டு நடைபெற்றுள்ள தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவித்தார்.
எந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்றால், டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியபோது தனது சமூக வலைத்தள பக்கங்களில் “ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் ஆகியோர் மீதெல்லாம் யாரும் கொலை செய்ய முயற்சி செய்யமாட்டார்கள்” எனக் கூறியிருந்தார். முன்னதாக பைடனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மஸ்க், பைடன் மீது யாரும் துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் எனத் தூண்டிவிடும் அளவுக்குப் பேசி டிரம்புக்கு தனது பலமான ஆதரவை வெளிப்படையாக கூறியிருந்தார்.
தீவிர பிரச்சாரம்
அதைப்போல, தேர்தல் களத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்த பல இடங்களில் அவருடன் வந்து அவருக்காகப் பேசி வாக்குகளையும் சேகரித்துக் கொடுத்தார் மஸ்க். டிரம்ப் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கங்களில் கூட தொடர்ச்சியாக டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பதிவிட்டு நேரடி பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தங்களுடைய பாதுகாப்புக்காகக் கையில் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்கிற சட்டம் வரும்.
அந்த சட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், டொனால்ட் டிரம்ப்க்கு வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு 47 டாலர் வழங்கப்படும் எனவும் அறிவித்து பணத்தை வாரி இறைத்து பிரச்சாரம் செய்து வந்தார் மஸ்க். அதன்பிறகு, இதனைக் கவனித்த அமெரிக்க நீதித்துறை இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனக் கூறி எலான் மஸ்க்க்கு எச்சரிக்கை விடுத்து அதற்குத் தடை விதித்தது. இருப்பினும் , அதனையெல்லாம் கவனிக்காமல் தொடர்ச்சியாகவே மஸ்க் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார்.
நிதிஉதவி
அதேப்போல, தேர்தலுக்காக பில்கேட்ஸ், கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.420 கோடி ) நிதியாக வழங்கியிருந்தார். அவர் வழங்கியதை விட அதிகமாக எலான் மஸ்க் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக நிதி அளித்தார். மொத்தமாக 132 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பின் படி ரூ.1000 கோடி) தேர்தல் நிதியாக அளித்து உதவி செய்திருந்தார் மஸ்க்.
நன்றி தெரிவித்த டொனால்ட் டிரம்ப்
தொடர் நேரடி பிரச்சாரம், ஆதரவு குரல்கள் மூலம் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு எலான் மஸ்க் அசுரத்தனமாக உழைத்தார் என்றே கூற வேண்டும். இப்படியான தொடர் ஆதரவுக்கு, தான் வெற்றிபெற்ற பிறகு தன்னுடைய உரையில் முதல் ஆளாக அவருக்குத் தான் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். இது குறித்து ஃப்ளோரிடா மாகாணத்தில் பேசிய டிரம்ப், ” தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமான நபர் எலான் மஸ்க் தான். அவருக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல ஒரு நபரை நாம் எந்த நேரத்திலும் விட்டுவிடக்கூடாது. அவரை போல இருக்கும் நல்ல மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்” என டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.