பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்… எலான் மஸ்க்!

Elon Musk

Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெஸ்லா போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் இந்த புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. புதிய EV கொள்கையின்படி, நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி ($500 மில்லியன்)  முதலீடு செய்ய வேண்டும்.

அதில், மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட பிற வசதிகளை அமைக்க வேண்டும். அப்படி ஆலைகளை நிறுவும் நிறுவனங்கள் குறைந்த சுங்க வரியில் கார்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் சர்வதேச முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக எலான் மஸ்கின் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகனங்கள் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து இம்மாதம் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பி  ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. டெஸ்லா நிறுவனம் சுமார் 3 பில்லியன் டாலர் செலவில் இந்தியாவில் மின்சார வாகன ஆலை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், எலான் மஸ்க் விரைவில் இந்தியா வருகை தந்து முதலீடு குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அப்போது, மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்