ட்விட்டர் லோகோவை மாற்றியதால் கிடுகிடுவென உயர்ந்த ‘Doge coin’ மதிப்பு.!
எலான் மஸ்க் ட்விட்டர் லோகோவை மாற்றியதால் ‘Dogecoin’ இன் மதிப்பு 30% உயர்ந்தது.
ட்விட்டர் தளத்தில் இன்று ஒரு புதிய மாற்றம் வந்துள்ளது. அதாவது, ட்விட்டர் ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில், சமூக வலைதளங்களில் பிரபலமான (மீம்) சீம்ஸ் நாய் படம் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ட்விட்டர் பயனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 ட்விட்டர் சிஇஓ-வாக பொறுப்பேற்ற பிறகு அவ்வப்போது இப்படியான பல மாற்றங்களை செய்து வருகிறார்.
லோகோவை மாற்றிய எலான் மஸ்க்:
டிவிட்டர் செயலி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து லோவாக இருந்த அந்த நீல பறவை மாற்றப்பட்டு, அந்த லோகோவுக்கு பதில் ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் முகத்தை லோகோவை மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது ட்விட்டர் இணையதளத்தில் மட்டுமே மாறி இருக்கிறது. ட்விட்டரின் மொபைல் செயலியில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இது நிரந்திரமாக இருக்காது என கூறப்படுகிறது.
Doge coin மதிப்பு உயர்வு:
இந்த நாய் ‘Doge coin’ எனும் கிரிப்டோகரன்சி லோகோவின் ஒரு பகுதியாகும். Doge coin லோகோவை ட்விட்டரில் பயன்படுத்தியதை அடுத்து, டோஜ்காயின் மதிப்பு 30% உடனடியாக உயர்ந்துள்ளது. இது டோஜ்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தாலும், பலரும் டோஜ்காயின்-ஐ விற்பனை செய்துவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. முன்பு இருந்தே Dogecoin-க்கு எலான் மஸ்க் தனது ஆதரவை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.