“வாங்க பேசலாம்”, டிரம்பை அடுத்து கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்த எலான் மஸ்க்.!

Donald Trump - Elon musk - Kamala Haris

அமெரிக்கா : டொனால்ட் டிரம்ப் உடனான ” எக்ஸ் ஸ்பேஸ் ” உரையாடலை தொடர்ந்து எலான் மஸ்க், அடுத்ததாக கமலா ஹாரிஸுக்கு “எக்ஸ் ஸ்பேஸ்”-இல் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்…

முன்னதாக, ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் அதிபர் தேர்தல் களத்தில் இருந்தார். ஆனால், தேர்தல் பிரச்சாரங்களில், பல்வேறு நிகழ்வுகளில், குறிப்பாக டொனால்ட் டிரம்ப் உடனான நேருக்கு நேர் பிரச்சாரத்தில் தடுமாற்றம் ஆகியவை ஜோ பைடனை தேர்தலில் இருந்து விலகும் நிலைக்கு கொண்டு சென்றது. அதன் பிறகே துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எக்ஸ் ஸ்பேஸில் டொனால்ட் டிரம்ப்…

கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை பல்வேறு வழிகளில் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், டொனால்ட் டிரம்ப் அண்மையில், எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் அதன் தலைமை அதிகாரி எலான் மஸ்க் உடன் ” எக்ஸ் ஸ்பேஸ் ” எனும் வலைதள உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களையும், எதிர்போட்டியாளர் கமலா ஹாரிஸ் மீதான கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார்.

எக்ஸ் ஸ்பேஸ் நிகழ்வில் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், தன் மீதான துப்பாக்கி சூடு பற்றி கருத்துக்களை தெரிவித்தார். அதில்,  ” என் மீது பாய்ந்தது துப்பாக்கி தோட்டா என்று அப்போதே எனக்கு தெரியும். அந்த தோட்டா என் காதை பலமாக தாக்கியது. அந்த சூழ்நிலையில் தைரியமாக இருப்பது போல நடிக்க முடியாது. ஆனாலும், அந்த சம்பவத்தின் போது தொண்டர்கள் பதட்டமடையாமல் இருக்கவே, நான் உடனடியாக மேடையில் எழுந்து நின்றேன். அப்போது கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். ” என குறிப்பிட்டார்.

மேலும் டிரம்ப் கூறுகையில், கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரி. அவர் அதிபராக வந்தால் அமெரிக்காவில் பிற நாட்டினரின் குடியேற்றம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அமெரிக்காவின் பணவீக்கம்  அதிகரிக்கும் என கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும் , குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹாரிஸ் கடந்த சில வாரங்களாக எந்த நேர்காணலிலும் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்தும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் டிரம்ப்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டு இருந்த இந்த எக்ஸ் ஸ்பேஸ் நிகழ்வு, குறிப்பிட்ட நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாக தான் தொடங்கியது. இந்த ஒட்டுமொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என எக்ஸ் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் ஸ்பேஸில் கமலா ஹாரிஸ்.?

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புடனான உரையாடலை தொடர்ந்து, எலான் மஸ்க், எக்ஸ் ஸ்பேஸ் தளத்தில் உரையாற்றுவதற்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மஸ்க் குறிப்பிடுகையில், ” எக்ஸ் ஸ்பேஸிஸ் கமலா ஹாரிஸ் பேசுவதை தொகுத்து வழங்கப்போவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.” என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக எந்தவித நேர்காணலிலும் கலந்து கொள்ளாத கமலா ஹாரிஸ், எலான் மஸ்க் உடனான எக்ஸ் ஸ்பேஸ் நிகழ்வில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், கமலா ஹாரிஸ் பிரச்சார செய்தி செய்தித் தொடர்பாளர், டிரம்ப் மற்றும் மஸ்க்கின் எக்ஸ் ஸ்பேஸ் நிகழ்வை பற்றி குறிப்பிடுகையில்,  ” நேரடி ஒளிபரப்பை கூட இயக்க முடியாத சுயவெறி கொண்ட பணக்காரர்களால் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று 40 நிமிட தாமதத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்