டிரம்புக்கு ஆதரவாக மஸ்க்.! மில்லியன் கணக்கில் நன்கொடை அளிக்க திட்டம்.!
அமெரிக்கா: இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரும் நேரடியாக கலந்து கொண்ட விவாத நிகழ்வில் டிரம்பிற்கு தான் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த மேடைகளில் ஜோ பைடன் பேச்சில் தடுமாறுவது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதே நேரம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் டொனால்ட் டிரம்பிக்கு அமெரிக்க தேர்தலில் ஆதரவான நிலைப்பாடு நிலவுகிறது. மேலும், அண்மையில் டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் அவர் மீது மேலும் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த உலக பணக்காரர்களின் முக்கியமானவரான எலான் மஸ்க், ட்ரம்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டையும் முன்னெடுத்தார்.
முன்னதாக எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சாரங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், எலான் மஸ்க் சமீபத்திய மாதங்களில் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமாகிவிட்டார் என்றும் அவரது அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளார் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனமான தி வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதியுதவி ஆதரவு அளிக்கும் அமெரிக்கன் PAC (Political Action Committee) நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் 45 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளாதாக தி வால் ஸ்ட்ரீட் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 30 அன்று முடிவடைந்த மூன்று மாத காலத்தில் அமெரிக்கா பிஏசி அமைப்பு 8.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்கிடம் இருந்து பங்களிப்பாக பெற்றுள்ளது. இம்மாதம் (ஜூலை) முதல் மேற்க்கண்ட நன்கொடைகளை பெற அமெரிக்கா PAC திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.