மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்! மீட்பு பணியில் சிக்கல்கள்…தற்போதைய நிலவரம் என்ன?
மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மதிப்பிட்டுள்ளது.

பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் மையப்பகுதி சாகைங் (Sagaing) நகருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே (Mandalay) மற்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 -ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. மியான்மர் இராணுவ அரசு தலைவர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) அறிவித்தபடி, குறைந்தது 1,644 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என மதிப்பிட்டுள்ளது என்பது தான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாண்டலேயில் கட்டடங்கள், பள்ளிகள், மடாலயங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் நேபிடாவில் (Naypyidaw) மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு, நோயாளிகள் வெளியில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அதைபோல தாய்லாந்தில் பாங்காக்கில் 33 மாடி கட்டடம் ஒன்று கட்டுமானத்தின் போது இடிந்து, குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் காணவில்லை என்றும், மீட்பு பணிகள் தொடர்கின்றன என்றும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஆனால், நாட்டில் நடக்கும் உள்நாட்டு போர், சாலை மற்றும் தகவல் தொடர்பு சேதங்கள் ஆகியவை மீட்பு முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளன. இராணுவ அரசு அரிதாக சர்வதேச உதவியை கோரி தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே சமயம், அங்கு இருக்கும் மக்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இந்தியா 15 டன் நிவாரணப் பொருட்களை (மருந்துகள், உணவு, கூடாரங்கள்) விமானம் மூலம் அனுப்பியுள்ளது. சீனாவும் மீட்பு குழுவை அனுப்பி உதவி செய்துள்ளது.
இருளில் தவிப்பு
நிலநடுக்கத்தால் மின் கம்பிகள் சேதமடைந்து, மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாண்டலேயில் மின் தடை ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தங்கியுள்ளனர். மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாததால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் இல்லாததால், மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள். நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில், தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலம் நிகழ்கிறது. மின் விநியோகம் இல்லாததால், தகவல் தொடர்பு சாதனங்களும் செயலிழந்து, மீட்பு பணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் சாகைங் பகுதியில் உள்ள புவிப்பிளவு (Sagaing Fault) காரணமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அதன் ஆழம் குறைவாக (10 கி.மீ.) இருந்ததால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.