வனுவாட்டு தீவுகளில் நிலநடுக்கம் – 14 பேர் உயிரிழப்பு!
வனுவாட்டுவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வனுவாட்டு: ஆஸ்திரேலியா அருகேயிருக்கும் ‘வனாட்டு’ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், போர்ட் விலாவில் உள்ள மீட்புப் படையினர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்பொழுது, நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.5 ரிக்டர் அளவுள்ள அதிர்வு கொண்ட நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் வனுவாட்டு தீவுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.