அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளதாக கனடா, ஐரோப்பியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்து இருந்தார். டொனால்ட் டிரம்ப் இந்த வரி உத்தரவை அறிவித்த உடனே எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் இருவரும் இந்த வரி உத்தரவுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி ” ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட சுங்க வரிகளுக்கு எதிராக நாங்கள் பதிலடி கொடுப்போம். கனடா தொழிலாளர்களை நாங்கள் பாதுகாப்போம். அமெரிக்காவுடனான எங்கள் வர்த்தக உறவு மிகவும் நெருக்கமானது, ஆனால் இந்த புதிய 10% சுங்க வரி கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய், எஃகு, மரம் போன்றவற்றை கடுமையாக பாதிக்கும்.
இது எங்கள் பொருளாதாரத்திற்கு நியாயமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் இதை சும்மா விட்டுவிட மாட்டோம். எங்கள் அமைச்சரவை ஏற்கனவே பதிலடி சுங்க வரிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, இது அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு குறிப்பாக விவசாய பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு விதிக்கப்படும். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை. கனடா தனது நலன்களை பாதுகாக்க தயங்காது.” எனவும் ஆவேசத்துடன் பிரதமர் மார்க் கார்னி பேசியுள்ளார்.
அவரை தொடர்ந்து பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் அவசர கூட்டத்தில் பேசிய உர்சுலா வான் டெர் லெயென் “இது உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய அடியாகும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், எங்கள் நலன்களையும் வணிகங்களையும் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறது.
ட்ரம்ப் அறிவித்த 20% சுங்க வரி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் $500 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகளை உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆட்டோமொபைல்கள், இயந்திரங்கள், மற்றும் ரசாயன பொருட்களைகடுமையாக பாதிக்கும். இது எங்கள் தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் நேரடியாக தாக்கும். நாங்கள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை மதிக்கிறோம், ஆனால் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால், எங்களால் சும்மா இருக்க முடியாது.
ஏற்கனவே நாங்கள் அமெரிக்க பொருட்களுக்கு சுங்க வரிகளை தயார் செய்து வருகிறோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், ஆனால் அவர்கள் இந்த சுங்க வரிகளை திரும்பப் பெறாவிட்டால், நாங்களும் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்” எனவும் திட்டவட்டமாக எச்சரிக்கும் வகையில்உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.