நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தியதை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராக மாசசூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது உலக அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.
இந்த வழக்கு, டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு வழங்கப்படும் $2.2 பில்லியன் (தோராயமாக 18,000 கோடி ரூபாய்) மதிப்பிலான ஃபெடரல் ஆராய்ச்சி நிதியை முடக்கியதற்கு எதிராக தான். மேலும், $9 பில்லியன் மதிப்பிலான மொத்த நிதி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய முயன்றதையும் எதிர்த்தும் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு முன்னதாக, டிரம்ப் அரசு, ஹார்வர்டுக்கு கடிதங்கள் எழுதி சில கோரிக்கைகளை வைத்தது. உதாரணமாக, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சமத்துவம் தரும் திட்டங்களை (DEI) நிறுத்த வேண்டும், பாலஸ்தீன ஆதரவு மாணவர் குழுக்களை அனுமதிக்கக் கூடாது, ஆர்ப்பாட்டங்களில் முகமூடி அணிவதை தடை செய்ய வேண்டும், மற்றும் வெளிநாட்டு மாணவர்களை புகாரளிக்க வேண்டும் எனவும் டிரம்ப் உத்தரவுப்போட்டிருந்தார். ஆனால், ஹார்வர்டு இதை செய்ய மறுத்துவிட்டது. இதனால், டிரம்ப் அரசு உடனடியாக 18,000 கோடி ரூபாய் பணத்தை முடக்கியது.
எனவே, ஹார்வர்டு, இந்த நடவடிக்கைகள் தவறு என்று கூறி, இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ” அமெரிக்கா அரசாங்கம் தன்னுடைய நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்ப்பது மிகவும் மோசமான விஷயம். இந்த மாதிரியான நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்று. இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது” எனவும் கூறியுள்ளது.