உக்ரைன் போர் குறித்து பேச புடினுக்கு கால் செய்தாரா டிரம்ப்? உண்மை இதுதான்!!
டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் உண்மையல்ல என ரஷ்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதில் பேசிய, புடின் ” புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் “துணிச்சலான” டிரம்புடன் பேசத் தான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்தவும், உக்ரைன் போரை முடிக்கவும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி புடின் பேசியிருந்தார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேசிய டொனால்ட் டிரம்ப் ” நான் போர்களைத் தொடங்க மாட்டேன், அவற்றை முடிவுக்குக் கொண்டு வர உதவுவேன்” என வாக்கு உறுதி அளித்து இருந்தார். எனவே, இதற்காக தான், அவருடன் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
எனவே, டிரம்புடன் புடின் பேச தயாராக இருப்பதை தொடர்ந்து இருவரும் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே, இருவரும் போன் கால் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தீயாக பரவியது.
உக்ரைன் போரை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் இருந்து தொலைபேசி மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து, இருவரும் போன் காலில் பேசியதாக வெளியான தகவல் வதந்தியாக பரவும் செய்தி என தற்போது ரஷ்யா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியது ” டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இருவரும் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஒரு வதந்தியாக பரவும் செய்தி. இருவரும் தொடர்பு கொண்டு எது குறித்தும் பேசவில்லை.
இப்படியான தகவலை அமெரிக்க ஊடகங்கள் தான் கிளப்பிவிட்டு இருக்கிறது. டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவரும் போனில் பேசியது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.