வெள்ளத்தால் உருக்குலைந்த ஸ்பெயின்.. 200-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரில் 5000-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துச் செல்லப்பட்டு, நெடுஞ்சாலைகளில் உருக்குலைந்து கிடக்கின்றன. இது 50 வருடத்தில் காணாத கனமழை என்று சொல்லப்படுகிறது.
ஆம், கிட்டத்தட்ட 1973ம் ஆண்டிற்குப் பிறகு, மேற்கு ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடராக இது கருதப்படுகிறது. அப்போது, வெள்ளத்தில் சிக்கி போர்ச்சுகலில் 500 பேர் இறந்ததற்குப் பிறகு, இந்த சோகம் ஐரோப்பாவின் மிக மோசமான வெள்ளம் தொடர்பான பேரழிவாகும்.