226 கி.மீ வேகத்தில் பிரான்ஸ் தீவை புரட்டிப்போட்ட சூறாவளி! ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள்…
பிரான்ஸ் நாட்டில் மயோட் தீவில் ஏற்பட்ட சிடோ எனும் சூறாவளி புயல் மணிக்கு சுமார் 226 கிமீ வேகத்தில் வீசியயது. இந்த சூறாவளியுடன் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மயோட் (Mayotte) தீவானது அண்மையில் வீசிய புயலால் பெரும் பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் மீட்புப்பணிகள் தொடர்வதால் உயிர்சேத எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, மயோட் தீவானது, இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்நாட்டு தலைநகர் பாரிசில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது ஏழ்மையான பகுதியாக பார்க்கப்படுகிறது. சுமார் 3,21,000 மக்கள் வசிக்கிறார்கள்.
மயோட் தீவில் ஏற்பட்ட சிடோ எனும் சூறாவளி புயல் மணிக்கு சுமார் 226 கிமீ வேகத்தில் வீசியயது. இந்த சூறாவளியுடன் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த வேகம் மற்றும் நிலச்சரிவு 4 சூறாவளிக்கு சமமானதாகும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கோர தாண்டவத்தில் மயொட் தீவு கடும் பாதிப்புக்கு உள்ளானது.
இதுகுறித்து நேற்று, அந்நாட்டு உள்ளூர் ஊடகத்தில் பேசிய மயோட் தீவின் தலைவர் , முதலில் உயிரிழப்புகள் 14 என்ற அளவிலேயே இருந்தது. அதன் பிறகு அது, நூற்றுக்கணக்கானது, பின்னர், நூற்றை தாண்டியது. தற்போது இன்னும் அதிகமாக உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன . மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், இதனால், உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.