எல்லை தாண்டிய தாக்குதல்: ஹமாஸ் பிடியில் 199 பணயக்கைதிகள் – இஸ்ரேல் ராணுவம் தகவல்!
காசா நகரில் 199 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் தற்போது வரை தங்கள் பதிலடி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் பற்றி அண்மையில் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என அறிவித்துள்ளார். அதற்கேற்றாற் போல, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரபடுத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலியன் தாக்குதலில் காசா நகரில் 2.670 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூத மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மரணம்!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே இன்று 10-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகளின் வசத்தில் 199 பேர் பணயக்கைதிகளாக வைத்திருப்பதாகக் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இது முன்னதாக பிடிபட்ட பணயக்கைதிகளை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
தற்போது, பிடிபட்டுள்ள பணயக்கைதிகளில் வெளிநாட்டவர் யாரேனும் உள்ளார்களா அல்லது பணயக்கைதிகளாக வைத்திருக்கும் குழு யார் என்றும் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பப்படுகிறது.
Video: ஹமாஸ் எல்லைக்குள் புகுந்து அதிரடி காட்டிய இஸ்ரேல்! 250 பிணைய கைதிகள் உயிருடன் மீட்பு.!
அந்த வகையில், இந்த பணயக்கைதிகள் காசாவில் எங்கிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த தாக்குதலையும் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், கடந்த 13ம் தேதி இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில், வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை அதிரடியாக சண்டையிட்டு மீட்டது குறிப்பிடத்தக்கது.