அன்பிற்கு பரிசாக சிறுமிக்கு ஆடு கொடுத்த 2½ கோடி! நெஞ்சை அள்ளும் நெகிழ்ச்சியான சம்பவம்!
அமெரிக்காவில் சிறுமி வளர்த்த ஆடு ஒன்று ஏலத்திற்கு பின் பலியான நிலையில், இழப்பீடாக சிறுமிக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா : கலிபோர்னியா மாநிலத்தில் 11 வயதான சிறுமி ஒருவர் கண்காட்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லமாக ஒரு ஆட்டை வளர்ந்து வந்தாள். ஆனால், இந்த பிஞ்சு மனதிற்கு அந்த ஆடு என்றைக்காவது ஒரு நாள் ஏலத்திற்குச் சென்றுவிடும் என்று தெரியாமல் வளர்த்துக்கொண்டு இருந்தாள். ஏனென்றால், அந்த ஆடு சிறுமிக்குக் கொடுக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம் மற்றும் சமூகத் திறன்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரணத்துக்காக மட்டும் தான்.
எனவே, இந்த திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நாளில் அதிகாரிகள் அந்த ஆட்டினைப் பெற்றுச் செல்வார்கள். அதன்பிறகு, அந்த ஆடுகள் ஏலத்தில் விற்கப்படும், மேலும், அதில் எந்த குழந்தை வளர்த்த ஆடு அதிகம் விலைக்கு ஏலம் சென்று வெற்றி பெறுகிறதோ அந்த குழந்தைகளுக்கு தான் பரிசுகள் வழங்கப்படும். இந்த சூழலில், அதிகாரிகள் அந்த சிறுமி வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு எடுத்துச்செல்ல வந்துள்ளனர்.
ஆனால், அந்த சிறுமி இது என்னுடைய ஆடு இதை நான் கொடுக்கமாட்டேன் என ஆட்டை ஏலத்திற்குக் கொடுக்க மறுத்துள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர்களிடம் பேசி அதிகாரிகள் ஆட்டை ஏலத்திற்கு எடுத்துச்சென்றார்கள். ஆட்டை ஏலத்திற்கு எடுத்துச் சென்ற அந்த நாளில் சிறுமியின் மனம் மிகவும் நொந்துபோனது. இதன் காரணமாக, தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்தார்.
மகள் ஆட்டுக்காக இந்த அளவுக்கு அழுதுகொண்டு இருக்கிறார். இது சரியாக வராது என யோசித்து ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர்கள் முயற்சி செய்தனர். ஆனால், ஏலத்தில் அவர்களால் ஆட்டை வாங்கமுடியவில்லை. பிறகு, ஏலத்தில் வேறொருவர் வாங்கிய அந்த ஆடு பலியிடப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஏல அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பலியாகிய ஆட்டிற்கான இழப்பீடாக சிறுமிக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2½ கோடி) வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணம் வந்தாலும் ஆடு இல்லாதது நினைத்து அந்த சிறுமி மனவேதனையில் தான் இருக்கிறார் என்கிறார்கள் அவருடைய பெற்றோர்கள்.