“தைரியமான மனிதர் டொனால்ட் டிரம்ப்”…புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்!
அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்க்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துத் தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபரானார். தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடேன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார்கள்.
அந்த வகையில், அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்தார். புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் “துணிச்சலான” டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்தவும், உக்ரைன் போரை முடிக்கவும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
இது குறித்து மாஸ்கோவில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ” டொனால்ட் டிரம்ப் போன்ற தைரியமான ஒரு நபர் வெற்றிபெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதில் நான் பெருமைப் படுகிறேன். டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. அதிலிருந்து தப்பித்த பிறகும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் “சண்டையிடுங்கள்” எனக் கூறி தைரியமாகப் பேசினார்.
அவருடைய தைரியம் என்னை வியக்க வைத்துள்ளது. அந்த தைரியத்துடன் தேர்தலில் வெற்றியும் பெற்று இருக்கிறார். அந்த தைரியமான மனிதருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நான் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன். அதைப்போல, டிரம்ப் வெற்றிபெற்றது அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்த ஒரு நல்ல விஷயமாகவும் அமைந்துள்ளது. உக்ரைன் போரை முடிக்க அவருடன் இணைந்து செயல்படவேண்டும்” எனவும் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
ஏற்கனவே, தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டொனால்ட் டிரம்பு ” அமெரிக்காவிற்கு என் மூச்சு இருக்கும் வரை கடுமையாக உழைப்பேன். அவர்கள் (ஜனநாயக கட்சி) நான் போரைத் தொடங்குவேன் எனத் தேர்தலுக்கு முன் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் எந்த போரையும் தொடங்கப்போவதில்லை. நான் உலக நாடுகளிடையே நடக்கும் போரை நிறுத்த போகிறேன்”, என டிரம்ப் கூறி இருந்தார். எனவே, டிரம்ப் இப்படிக் கூறியிருப்பதால் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவருடன் இணைந்து உக்ரன் போரை முடிக்க அவருடன் இணைந்து செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.