தொடர் தாக்குதல்: காஸாவில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு – UNICEF இயக்குநர்

children killed

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் அறிவித்துள்ளார்.  பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு அக்.7, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் மீது தற்போது வரை இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரால் இருதரப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து இன்று 15வது நாள் நீடித்து வரும் நிலையில், காசாவில் வன்முறையால் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த 493,000 பெண்கள் மற்றும் சிறுமிகளில், 900 புதிய விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்கள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஏனெனில் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை இடைவிடாமல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், காசாவில் இரண்டு வார குண்டுவெடிப்புகளில் மட்டுமே 1,600க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது என மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் தெரிவித்துள்ளார்.  4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகளைக் கொல்வது மற்றும் ஊனப்படுத்துவது, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான அணுகலை மறுப்பது ஆகியவை கடுமையான குழந்தை உரிமை மீறல்களாகும். மனிதநேயம் மேலோங்க வேண்டும் எனவும் தனது எக்ஸ்  தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்த தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12,065 மக்கள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், காஸாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்